Thursday, December 10, 2015

ஆசை அல்ல..... பேராசை.

ஆசை, அல்ல  பேராசையின் விளைவாக இயற்கை சீற்றங்கள்  இன்று  செயற்கையாக உண்டாக்கப்பட்ட சீற்றங்களா கியுள்ளன.. ஆம், மழையோ அல்லது பெருமழையோ பெய்வது இயற்கைதான் அதற்கான வடிகால் அமைப்பு முறைகளை பன்னெடுங்காலத்திற்கு முன்பே இயற்கை இயல்பாகவே கட்டமைத்துவிட்டது. ஆனால்  மனிதனின் நில ஆக்கிரமிப்பு ஆசையினால் நீரின் வழித்தடங்கலும், அதன் பயணத்தின் இறுதியான ஏரிகளும், ஆறுகளும் இப்போது வீடுகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளுமானதால் உண்டான விளைவை இன்று எதிர்கொண்டிருக்கிறோம்.








யார் காரணம் என ஆராய்ந்தால் விரல்கள் எல்லாத் திசையிலும் சுழலும் , ஒரு கட்டத்தில் அது உங்களை நோக்கியும் வரும். சென்னை ஒரு வடிவமைக்கப்படாத மாநகர், நமக்கு எந்த எட்வின் லுட்யூன் சும் இல்லை நம்மில் எத்துனை பேருக்கு  தெரியும், இங்கு ஒருவர் புதிதாக  நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டுமானால்,  நில மதிப்பில் பத்து சதவீதம் சென்னை மாநகராட்சி வளர்ச்சி கழகத்திற்கு செலுத்த வேண்டும். இந்த அமைப்பானது பெயருக்கேற்றார் போல் செயல்படுகிறாதா என்றால், 'பறவை'முனியம்மா பறப்பதில்லை என்பதைப் போல் தான். சென்னை வளர்ச்சி கழகத்தால் சென்னை வளர்கிறதோ இல்லையோ அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நன்றாகவே வளர்ந்துள்ளார்கள். கல்வி அறிவிலும் , கட்டமைப்பு மற்றும் சாலை வசதிகளாலும் நம்மை விட பின்தங்கிய ஒரிசா மாநிலம் கடந்த ஆண்டு  சந்தித்த புயலை எதிர்கொண்ட விதம், ஐக்கிய நாடுகள்  சபை யாலே பாரட்டப்பட்டது. அம்மாநில அரசு  புயலுக்கு முன்பு செய்த சரியான திட்டமிடலே அதற்கான காரணம்.
இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெருமழை வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை எந்த ஒரு அதிகாரிகளும் , ஆட்சியிலிருப்போறும் சட்டை செய்ததாக தெரியவில்லை. முதலமைச்சர் செப்டம்பரில் கோடநாடு பயணம் செய்துவிட்டார், அமைச்சர்கள் என்ன செய்வதென்று அவர்களுக்கே தெரியவில்லை(மதுரைக்கு அழகர் வந்து விட்டால் அழகர் மலையில் எதுவும் நடக்காது அது போல) மாநகராட்சி மேய ரோ சென்னையில் எவ்வளவு பெரிய மழையையும் தாங்கும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு விட்டன, சென்னை மழையை எதிர்கொள்ள தயா ரக வே உள்ளது என்றார் .ஆனால், இன்று சாலைகள் அனைத்தும் பல் இளிக்கின்றன.




டிசம்பர் 2 முதல் இரண்டு நாட்கள் என்னுடைய பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது, செல்போன்  சேவைகள்  நிறுத்தப்பட்டன, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்கவில்லை என்னைப் போன்ற திருமணமாகாத  இளைஞர்கள், விடுதியில் தங்கியிருப்போர் உணவுக்காக அலைகிறோம்.
ஒரு பை  ரொட்டித் துண்டு கிடைப்பது கடினமாக உள்ளது, இடைத்தாலும் விலை பன்மடங்காக உள்ளது. இதற்கும் அரசின் பதில் மெளனமாகவே உள்ளது. ஆர் கே நகர் தேர்தலுக்கு அமைச்சர்கள் இரண்டு மாதமாக இடைவெளி இல்லாது அல்லும், பகலும் உழைத்து தன் தலைவியை வெற்றி பெறச் செய்தவர்கள் அதில் ஒரு சதவீத மேனும்
 மழை வெள்ளப் பணியில் செய்திருந்தால் இவ்வளவு இழப்பை தமிழகம்  சந்தித்திருக்காது. அவர்கள் மக்களுக்கு அமைச்சர்களா ?  இல்லை தலைவியின் நல்ல தொண்டர்களா ? இதில்  அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றொன்றை கைவிடுவதே அவர்களுக்கும் மக்களுக்கும் நலம். இல்லையென்றால் மக்கள் அவர்களை கைவிடுவார்கள்.